அவுஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி

September 9, 2012  09:12 am

Bookmark and Share
அவுஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2வது 20 ஓவர் சர்வதேச கிரிக்கெட் போட்டி டுபாயில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில், முதலில் ஆடிய பாகிஸ்தான் 4 விக்கெட்டுக்கு 151 ஓட்டங்கள் சேர்த்தது. அதிகபட்சமாக அணித் தலைவர் முகமது ஹபீஸ், நசிர் ஜாம்ஷெட் தலா 45 ஓட்டங்கள் விளாசினர்.

தொடர்ந்து விளையாடிய அவுஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர் (31 ஓட்டங்கள்), வாட்சன் (33 ஓட்டங்கள்), மைக்ஹஸ்ஸி (23 ஓட்டங்கள்) ஆகியோர் நல்ல தொடக்கம் தந்தாலும் மிடில் வரிசையில் தலைவர் ஜார்ஜ் பெய்லி தவிர மற்றவர்கள் சொதப்பினர். பரபரப்பாக நகர்ந்த இந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் அவுஸ்திரேலியாவின் வெற்றிக்கு 10 ஓட்டங்கள் தேவைப்பட்டன. கைவசம் 4விக்கெட்டுகள் இருந்தன. 20வது ஓவரை பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் அப்துல் ரசாக் வீசினார். அவர்,முதல் 4 பந்துகளில் பெய்லியின் (42 ஓட்டங்கள்) விக்கெட்டை சரித்து 3 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

இதன் பின்னர் 5வது பந்தில் பேட் கம்மின்ஸ் அட்டகாசமாக ஒரு சிக்சருக்கு தூக்க, ஸ்கோர் சமன் ஆனது. இதையடுத்து கடைசி பந்தில் அவுஸ்திரேலியாவுக்கு ஒரு ஓட்டங்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் புல்டாசாக வந்த இறுதி பந்தில் பேட் கம்மின்ஸ் (7 ஓட்டங்கள்) கேட்ச் ஆகி போனார். அவுஸ்திரேலியாவின் ஸ்கோரும் 20ஓவர்களில் 8விக்கெட்டுக்கு 151ஓட்டங்களில் முடிந்ததால் ஆட்டம் ´டை´ ஆனது.

இதையடுத்து வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ஒவ்வொரு அணியிலும் 3பேட்ஸ்மேன்கள் (அதாவது 2விக்கெட்) களம் இறங்க வேண்டும். இதன்படி சூப்பர் ஓவரில் ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. பாகிஸ்தான் தரப்பில் உமர்குல் பந்து வீசினார். இந்த ஓவரில் அவுஸ்திரேலியா வார்னரின் விக்கெட்டை இழந்து 6பந்துகளில் 11ஓட்டங்கள் எடுத்தது.

தொடர்ந்து 12 ஓட்டங்கள் இலக்கை நோக்கி உமர் அக்மலும்,அப்துல் ரசாக்கும் ஆடினர்.

அவுஸ்திரேலியா சார்பில் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் சூப்பர் ஓவரை வீசினார். உமர்-ரசாக் ஜோடி 2பவுண்டரி உள்பட 12 ஓட்டங்கள் திரட்டி கடைசி பந்தில் பாகிஸ்தான் அணிக்கு திரிலிங்கான ஒரு வெற்றியை பெற்றுத்தந்தது.

இந்த வெற்றியின் மூலம் 3போட்டி கொண்ட 20ஓவர் தொடரை பாகிஸ்தான் 2-0என்ற கணக்கில் கைப்பற்றியது. 3-வது ஆட்டம் இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.

தொடரை இழந்ததால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) 20 ஓவர் போட்டி அணிகளின் தரவரிசையில் அவுஸ்திரேலியா 85புள்ளிகளுடன் 10வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. வங்காளதேசம் 8வது இடத்திலும் (95 புள்ளி), அயர்லாந்து 9வது இடத்திலும் (88 புள்ளி) இருப்பது குறிப்பிடத்தக்கது.

தரவரிசையில் குட்டி அணியான அயர்லாந்துக்கும் கீழாக சென்றிருப்பதால் அவுஸ்திரேலிய கேப்டன் ஜார்ஜ் பெய்லி கடும் அதிருப்தி அடைந்துள்ளார். அவர் கூறுகையில், தரவரிசை முறை நன்றாக இல்லை. எந்த அடிப்படையில் தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது என்பது எனக்கு இன்னும் புரியவில்லை.

எங்களுடன் இதுவரை அயர்லாந்து அணி 20ஓவர் கிரிக்கெட்டில் விளையாடியதில்லை. ஆனால் அவர்கள் எங்களை முந்தியுள்ளனர். எங்களை விட அயர்லாந்து சிறந்த அணியாக இருந்தால், இலங்கையில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியின் போது (செப்.19ந்திகதி அவுஸ்திரேலியா-அயர்லாந்து மோதல்) அது தெரிந்து விடும் என்றார்.

Share this article with a friend

Provide your friends' Email address (Multiple email addresses can be separated with a comma and
should not contain any in between spaces.)

Recepient(s)  Your Name 

அதிகம் பார்த்த காணொளிகள்

Copyright © 2012/13 Ada Derana. All rights reserved. Solution by Fortunaglobal.