கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றில் தமிழக அரசு வழக்கு

September 15, 2012  12:23 pm

Bookmark and Share
முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

1974-ஆம் ஆண்டு கருணாநிதியின் தலைமையிலான தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கச்சத்தீவினை இலங்கைக்கு இந்தியா தாரை வார்த்ததன் காரணமாக, ராமேஸ்வரம் பகுதியைச் சார்ந்த தமிழக மீனவர்களின் தொழில் பாதிக்கப்படுவதும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், மேற்கு வங்க மாநிலம் “பெருபாரி” வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பினைச் சுட்டிக்காட்டி, கச்சத்தீவினை இலங்கைக்கு இந்தியா தாரை வார்த்த ஒப்பந்தங்கள் சட்டப்படி செல்லத்தக்கவை அல்ல என சுட்டிக்காட்டி, உச்ச நீதிமன்றத்தில் நான் 2008-ம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்ற முறையில் வழக்கு தொடர்ந்தேன்.

இது மட்டுமல்லாமல், கடந்த 2011 ஆம் ஆண்டு நான் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றவுடன், இந்த வழக்கிற்கு வலு சேர்க்கும் விதமாக, கச்சத்தீவு குறித்த அனைத்து ஆவணங்களையும் தன் வசம் வைத்துள்ள தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறை தன்னை ஒரு வாதியாக சேர்த்துக் கொள்ளும்படி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் இயற்ற நடவடிக்கை எடுத்தேன்.

இந்தத் தீர்மானத்தினையடுத்து, தமிழ்நாடு அரசின் வருவாய் துறையும் மேற்படி வழக்கில் தன்னை ஒரு வாதியாக இணைத்துக் கொண்டது. என்னால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்திய நாட்டுக்குச் சொந்தமான ஒரு பகுதியை அந்நிய நாட்டிற்குக் கொடுப்பது தொடர்பான உடன்பாட்டை பாராளுமன்ற இரு அவைகளின் ஒப்புதலோடு இந்திய அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும் என 1960-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் “பெருபாரி” வழக்கில் தீர்ப்பளித்ததை சுட்டிக்காட்டி, இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு முற்றிலும் முரணான வகையில் பாராளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் இல்லாமல், கச்சத்தீவை தாரை வார்க்கும் ஒப்பந்தம் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்டது செல்லத்தக்கதல்ல என்று எடுத்துரைத்து இருக்கிறேன்.

தற்போது தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையின் தாக்குதல் குறையாத இன்றைய நிலையில், அது குறித்து 14.9.2012 அன்று எனது தலைமையில் ஓர் ஆய்வுக் கூட்டம் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர், உள்துறை முதன்மைச் செயலாளர், வருவாய்த் துறை முதன்மைச் செயலாளர், கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன் வளத்துறை செயலாளர், அரசு தலைமை வழக்குரைஞர், அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துவிட்ட ஒப்பந்தங்கள் செல்லத்தக்க தல்ல என தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை உச்ச நீதிமன்றம் உடனடியாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கோரி ஒரு மனுவினை தமிழ்நாடு அரசின் சார்பில் தாக்கல் செய்வது என முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share this article with a friend

Provide your friends' Email address (Multiple email addresses can be separated with a comma and
should not contain any in between spaces.)

Recepient(s)  Your Name 
Most Viewed

அதிகம் பார்த்த காணொளிகள்

Copyright © 2012/13 Ada Derana. All rights reserved. Solution by Fortunaglobal.